ஆம்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி!

 
accident

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பச்சகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராவ் (60). இவர் இன்று காலை ஆம்பூர் பஜார் பகுதிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நெடுஞ்சாலையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, சுந்தர் ராவின் இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் தேசிய நெடுஞ்சாலையின் மையத்தில் தடுப்பு வேலியில் மோதி விபத்திற்குள்ளானது.

ambur

இதில் பலத்த காயமடைந்த சுந்தர் ராவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த ஆம்பூர் டவுன் போலீசார், விபத்தில் பலியான சுந்தர் ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து சுந்தர் ராவின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வாகனம் குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.