ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் - அமைச்சர் முத்துசாமி உறுதி!

 
erode

ஈரோடு வீரப்பன் சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு வீரப்பன் சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு, அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு 395 மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் கூட்டத்தினர் இடையே பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 127 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 17,553 பிளஸ் 2 பயிலும் மாணவ - மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கப்படும் என தெரிவித்தார்.

muthu

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்துள்ளதாகவும், இது மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும் என்றும் கூறினார். மேலும், வீரப்பன் சத்திரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால், அருகேயுள்ள ஈரோடு சி.என். கல்லூரியில் புதிய வகுப்பறைகள் கட்ட இடம் வழங்குமாறு கோரியுள்ளதாகவும், ஆனால் கல்லூரியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளையிர்ல, இந்த பள்ளிக்கு வேறு இடம் கிடைக்க பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்த அமைச்சர் முத்துசாமி, பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா, எம்.பி., கணேசமூர்த்தி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ்,  முதன்மை கல்வி அதிகாரி அய்யனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.