2 குழந்தைகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சி... 9 மாத குழந்தை பலி!

 
infant

கிருஷ்ணகிரி அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், 9 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஞானமலர்(22). இத்தம்பதிக்கு ஒரு மகனும், 9 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், ஞானமலருக்கு, அதே கிராமத்தை சேர்ந்த தங்கராஜ்(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இதனை அறிந்த மாதேஷ், மனைவி ஞானமலரை கண்டித்து கள்ளக்காதலை கைவிடுமாறு கூறி உள்ளார். 

krishnagiri

இதனிடையே, தங்களது கள்ளக் காதலுக்கு, ஞானமலரின் 2 குழந்தைகளும் இடையூறாக உள்ளதாக கருதிய தங்கராஜ், பிள்ளைகளை கொன்று விடுமாறு அவருக்கு ஆலோசனை கூறியுள்ளார். அதன் பேரில், சம்பவத்தன்று ஞானமலர் தனது 2 குழந்தைகளுக்கும் எலி பேஸ்ட்டை கொடுத்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் தன்னிடம் கேட்டால் மாட்டிக் கொள்வோம் என அச்சமடைந்த ஞானமலர், தானும் விஷத்தை சாப்பிட்டார். மயங்கிய நிலையில் கிடந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று 9 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து கணவர் மாதேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் ராயக்கோட்டை போலீசார், ஞானமலர், அவரது கள்ளக்காதலன் தங்கராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.