சாலையில் நடந்துசென்ற நபரை தாக்கிய மக்னா யானை... சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
elephant

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் சாலையில் சென்ற நபரை காட்டுயானை தாக்கிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா பகுதியில் சுற்றித்திரிந்த பி.எம்-2 மக்னா யானை, இருவரை தாக்கி கொன்றது. மேலும், ஏராளமான வீடுகளை தாக்கி சேதப்படுத்தியது. இதனை அடுத்து, கடந்த மாதம்  வனத்துறையினர்   பி.எம்-2 மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அதற்கு ரேடியோ காலர் கருவி பொருத்தி சீகூர் வனப்பகுதியில் விடுவித்தனர். ஆனால் அந்த யானை முதுமலை வழியாக கூடலூர் பகுதிக்கு வந்தது. இதனால், கும்கி யானைகள் உதவியுடன், கர்நாடக மாநில வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், அந்த யானை கேரள மாநில எல்லையில் உள்ள முத்தங்கா வனப்பகுதிக்குள் சென்றது.

அங்கு கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்த  பி.எம்-2 மக்னா யானை, நேற்று அதிகாலை வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரி நகருக்குள் புகுந்தது. அங்கு சாலையில் உலா வந்த  பி.எம்-2 மக்னா யானை, சாலையில் நடந்து சென்ற முதியவரை தாக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதனை அடுத்து, அந்த யானை வேறு பகுதிக்கு சென்றது. இந்த நிலையில், முதியவரை யானை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.