சேலம் அருகே விபத்தில் சிக்கி தீ பற்றி எரிந்த சொகுசு கார்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

 
slm

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே விபத்தில் சிக்கிய சொகுசு காரில் திடீரென தீப்பற்றிய நிலையில், காரில் இருந்த குழந்தை உள்ளிட்ட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள எலத்தூரை சேர்ந்தவர் முரளி. விவசாயி. இவர் நேற்று காலை தனது மகனுடன், சொகுசு காரில் தீவட்டிப்பட்டி நோக்கி சென்றுள்ளார். எலத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, சேலத்தில் இருந்து பெங்களுரு நேக்கி சென்ற மற்றொரு சொகுசு கார், முரளியின் கார் மீது அதிவேகமாக மோதியது. மேலும், கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த இரும்பு தூணின் மீது மோதி நின்றது. இதில் காரில் பயணித்த கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த குழந்தை உள்பட 4 பேர் லேசான காயமடைந்தனர்.

salem

இதனிடையே விபத்தில் சிக்கிய பெங்களுரு காரில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று காரில் இருந்த குழந்தை உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முரளி காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தபோதும், தந்தை - மகன் இருவரும் காயங்கள் இன்றி தப்பினர். விபத்தில் சிக்கிய கர்நாடக மாநில காரில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் காடையாம்பட்டி தீயணைப்பு துறையினர், சாலையில் பற்றி எரிந்த காரின் மீது, தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த  தீ விபத்து காரணமாக சேலம் - பெங்களூரு சாலை மற்றும் பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார், 2 கார்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.