ஓசூரில் வடமாநில தம்பதியின் 6 மாத குழந்தை கடத்தல்... பெங்களுருவை சேர்ந்த பெண் கைது!

 
hosur

ஓசூர் பேருந்து நிலையத்தில் வடமாநில தம்பதியின் 6 மாத குழந்தையை கடத்திய பெங்களுருவை சேர்ந்த பெண்ணை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் வாராணாசியை சேர்ந்தவர் ராம்கோவர். இவர் சனிக்கிழமை இரவு மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்தார். நள்ளிரவாகியதால் அவர்கள் செல்லும் ஊருக்கான பேருந்து சென்ற நிலையில், பேருந்து நிலையத்திலேயே அனைவரும் படுத்து துங்கி உள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது, ராம்கோவரின் 6 மாத குழந்தை மாயமாகி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராம்கோவர் மற்றும் அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனால் அவர் ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

hosur

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் தலைமையில், ஏடிஎஸ்பி விவேகானந்தன், ஏஎஸ்பி அர்விந்த், ஓசூர் டவுன் காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார், பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பெண் ஒருவர், வடமாநில தம்பதியின் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனை அடுத்து, ஓசூர் ராயக்கோட்டை சாலையில் குழந்தையுடன் சென்ற பெங்களுரை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற அந்த பெண்ணை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 6 மாத குழந்தையை மீட்டனர். தொடர்ந்து, கைதான பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட 5 மணி நேரத்தில் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.