சேலத்தில் இறந்த மனைவிக்கு சிலை அமைத்த கணவர்!

 
slm statue

சேலத்தில் பாம்பு கடித்து இறந்த மனைவிக்கு சிலை அமைத்து வீட்டின் வரவேற்பறையில் வைத்துள்ள கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள கிளாக்காடு பகுதியை சேர்ந்தவர் இருசன். இவரது மனைவி நிலா. இவர்களுக்கு கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கஸ்தூரி, லோகேஸ்வரி, ரேஷ்மா என 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகிய நிலையில், மற்ற 2 மகள்களும் கல்லூரி படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நிலா இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அவரை விஷப்பாம்பு கடித்துள்ளது. இதனை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

slm

வீட்டில் கழிவறை இல்லாததால் பாம்பு தீண்டி மனைவி இறந்ததை எண்ணி மனவேதனை அடைந்த இருசன், குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மீண்டும் அதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என தீர்மானித்தார். இதனை அடுத்து, கடுமையாக முயற்சி செய்து அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வீட்டை கட்டி முடித்தார். அப்போது, இறந்தவர்களுக்கு உறவினர்கள் சிலை அமைத்து விழாக்கள் நடத்தும் செய்தியை பார்த்த இருசன், இதேபோல் தனது மனைவி நிலாவுக்கும் சிலை வைக்க வேண்டும் என முடிவெடுத்தார். 

இதனை தொடர்ந்து, சென்னையில் உள்ள சிலை தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் சிலிக்கான் மற்றும் பைபர் மூலம் மனைவி நிலாவின் சிலையை உருவாக்கினார். தொடர்ந்து, அந்த சிலையை தனது புதிய வீட்டின் வரவேற்பறையில் வைத்து இருசன் மற்றும் அவரது உறவினர்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும், நிலா உயிருடன் இருந்தபோது அணிந்திருந்த சேலைகள், நகைகள் மற்றும் தாலி ஆகியவற்றை அவரது சிலைக்கு அணிவித்து அழகு பார்த்து வருகிறனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.