ஆரணியில் காரில் கடத்தி வந்த ரூ.1.90 லட்சம் குட்கா பறிமுதல் - இருவர் கைது!

 
arani

பெங்களுருவில் இருந்து ஆரணிக்கு காரில் கடத்தி வந்த ரூ.1.90 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் கடைகளில் வெளி மாநிலத்தில் இருந்து குட்கா கடத்திவந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஆரணி டவுன் காவல் நிலைய போலீசார், நேற்று சேவூர் புறவழிச்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாக எடுத்துச் சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த காரை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர்.

police

அப்போது, காரில் இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, காரில் இருந்த ரூ.1.90 லட்சம் மதிப்பிலான 300 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்தியது தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த 2 நபர்களை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பெங்களுருவில் இருந்து விற்பனைக்காக குட்காவை ஆரணிக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது.