ஆம்புலன்சில் வந்து பிளஸ் 2 தேர்வெழுதிய அரசுப்பள்ளி மாணவி... திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

 
ambulance

திருப்பூரில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவி ஆம்புலன்ஸ் முலம் பள்ளிக்கு வந்து தேர்வெழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பூர் குப்பாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அய்யனார் - கீதா தம்பதியினர். இவர்களது மகள் ரிதன்யா(17). இவர் கணபதிபாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ரிதன்யாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெற்றோர் அவரை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ambulance

அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவரது வயிற்றில் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்னர், அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் அவர் நலமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றதால், ரிதன்யா தேர்வு எழுத வேண்டும் என பெற்றோர் மற்றும் மருத்துவரிடம் கேட்டுள்ளார்.

அவரது கல்வி பாதிக்கக்கூடாது என கருதிய மாணவியின் பெற்றோர், மருத்துவர் ஆலோசனையின் பேரில் ஆம்புலன்ஸ் வாகனம் முலம் மருத்துவமனையில் இருந்து கணபதிபாளையம் அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், ஸ்ட்ரெச்சர் முலம் தேர்வறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவி ரிதன்யா, பின்னர் தேர்வறையில் அமர்ந்து, பொதுத்தேர்வினை எழுதினார். இந்த சமபவம் பள்ளி மாணவர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.