பெற்றோர் இறந்த விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... ஆதரவின்றி தவிக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரி!

 
suicide

மதுரையில் தாய், தந்தை இறந்த விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மனநிலை பாதிக்கப்பட்ட அவரது சகோதரி ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார்.

மதுரை உலகனேரி அம்பலக்காரன் பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவி, சிவரஞ்சனி, அமுதா(24) என 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகள் சிவரஞ்சனி, மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு முருகனின் மனைவி இறந்துவிட்டார். இதனால், முருகன், தனது 2 மகள்களையும் பராமரித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் உசிலம்பட்டி பகுதியில் நடைபெற்ற விபத்தில் முருகன் பலத்த காயமடைந்தார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

madurai gh

அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை அன்று முருகன் உயிரிழந்தார். இதனிடையே, தந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்த அமுதா, மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். சில காரணங்களால் திடீரென அவரது பிரேத பரிசோதனை ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான அமுதா, தனது வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் தகவலின் பேரில் மாட்டுத்தாவணி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.  இதனிடையே, பெற்றோரும், தன்னை பராமரித்து வந்த சகோதரியும் அடுத்தடுத்து இறந்து விட்டதால் முருகனின் மனநிலை பாதிக்கப்பட்ட மகள் சிவரஞ்சனி ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார். அவரை காப்பகத்தில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.