4 வயது மகனுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை... ஓமலூர் அருகே சோகம்!

 
suicide

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 4 வயது மகனுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஓலைப்பட்டியை சேர்ந்தவர் தனபாதி. இவர் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தேவி(25). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு, சித்தேஸ்வரன்(4) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில், தேவிக்கு மனநல பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, ஆசிரியர் தனபாதி அதிகாலையில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

salem

இதனால் வீட்டில் தேவி, அவரது மகன் சித்தேஸ்வரன் மட்டும் இருந்துள்ளனர்.  இந்த நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாக தேவியின் வீடு திறக்காமல் இருந்ததுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை தேடி உள்ளனர்.  அப்போது, வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் தேவி மற்றும் அவரது மகன் சித்தேஸ்வரன் ஆகியோர் சடலமாக மிதந்தனர். இதனை கண்டு அதிர்ச்சிக்குள்ளான கிராமத்தினர், இது குறித்து தொளசப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றில் இருந்த தேவி மற்றும் சித்தேஸ்வரன் ஆகியோரது உடல்களை மீட்டனர். பின்னர், உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேவி குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.