"விநாயகர் சதுர்த்தி விடுமுறை: பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு செல்ல வேண்டாம்" - நாமக்கல் ஆட்சியர் வேண்டுகோள்!

 
namakkal

காவிரி ஆற்றில் 2.20 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.60 லட்சம் கனஅடிக்கு மேலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி பகுதியில் காவிரி ஆற்றில் வெள்ளநீர் அதிகரித்து வருவதை, நேற்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கான முன்னேற்பாடு கூட்டத்தில் பங்கேற்ற அவர், காவிரி ஆற்றில் வெள்ளநீர் அதிகரித்து வருவதை ஒட்டி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-  காவிரி ஆற்றில் வினாடிக்கு 2.20 லட்சம் கனஅடிக்கு மேலாக தண்ணீர் வர வாய்ப்பு. தண்ணீர் வரத்து அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது. ஆனால் நீர்வரத்து குறைவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை. விடுமுறை தினம் என்பதால் மக்கள் செல்பி எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ, நீச்சல் அடிக்கவோ காவிரி ஆற்றுக்கு வரக் கூடாது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் ஆங்காங்கே உள்ள ஏரிகளும் நிரம்பி உள்ளன. அதனால் தயவுசெய்து யாரும் தண்ணீரில் நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விடுமுறை விடப்பட்டு உள்ளதால், இதுபோன்ற சூழலில் காவிரி ஆற்றுக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.