பிராங்க் வீடியோ விவகாரம்... கோவை 360 டிகிரி யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு!

 
kovai 360

கோவையில் பிராங்க் வீடியோ எடுத்த கோவை 360 டிகிரி என்ற யூடியூப் சேனல் மீது மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் Prank Videos என்ற பெயரில் பெண்கள் மற்றும் முதியோர்களது சம்மதம் ஏதும் இன்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு அவர்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில், வீடியோக்கள் எடுப்பவர்கள் குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலைய போலீசார் கண்காணித்து வந்தனர்.
kovai 360 digree

இந்த நிலையில், கோவை 360 டிகிரி என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள் மேற்கண்ட  Prank Videos என்ற பெயரில் பொதுமக்களின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், உடல் ரீதியாகவும், மனரீதியாக துன்புறுத்தும் வகையில் நடந்துகொண்டு அதை வீடியோ எடுத்து, கோவை 360 டிகிரி என்ற யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டது தெரியவந்தது.

அதன் பேரில், கோவை சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்.39/ 2022 U/s 354D IPC & 4 of TNPHW Act r/w66E IT Actன் படி கோவை 360 டிகிரி என்ற யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Prank Videos தொடர்பாக தேவையின்றி பொதுமக்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.