கிருஷ்ணகிரி அருகே விவசாயி மர்மமான முறையில் உயிரிழப்பு!

 
dead body

கிருஷ்ணகிரி அருகே விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய கோட்டப்பள்ளி அருகே உள்ள பெத்தளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி (65). விவசாயி. இவர் கடந்த புதன்கிழமை அன்று தனது விவசாய நிலத்திற்கு புறப்பட்டு சென்றார். அன்று மாலை அவரது நிலத்தின் வழியாக கிராமத்தினர் சென்றபோது, அங்கு வெங்கடசாமி இறந்த நிலையில் கிடந்தார். மேலும், அவரது கை, கால்கள், கழுத்து மற்றும் தொடை பகுதியில் தோல்கள் உரிந்த நிலையில் காணப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர், இது குறித்து வெங்கடசாமியின் மகன் ஆனந்தனுக்கு தகவல் அளித்தனர்.

police

தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில், மகராஜகடை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.