நல்லம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி!

 
dead

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மின் இணைப்பு கொடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். 

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள கோணங்கி ஹள்ளியை சேர்ந்தவர் முனுசாமி (35). விவசாயியான இவருக்கு செல்வி என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். முனுசாமி, தனது 2 ஏக்கர் நிலத்திற்கு மின் இணைப்பு பெற்று, மின் மோட்டார் மூலம் விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே கடந்த 3 மாத காலமாக அவர் மின் கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் மின்சார வாரிய ஊழியர்கள், அவரது தோட்டத்திற்கான மின் இணைப்பை துண்டித்து உள்ளனர். இதனை தொடர்ந்து, முனுசாமி அபராதத் தொகையுடன் மின்சார கட்டணத்தை செலுத்தியுள்ளார். அப்போது, மின்சார வாரிய ஊழியர்கள் சில நாட்களுக்கு பிறகு மின் இணைப்பு கொடுப்பதாக கூறி அனுப்பி உள்ளனர்.

dharmapuri ttn 

இந்த நிலையில், நேற்று முனுசாமி அந்த பகுதியில் மின்மாற்றியில் மின்சாரத்தை நிறுத்திவிட்டு தனது தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின்சார இணைப்பு கொடுக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக மேலே உள்ள ஹெச்.டி. இணைப்பில் அவர் கை உரசியதால் முனுசாமி மீது மின்சாரம் தாக்கியது. இதில் மின் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முனுசாமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.