திண்டுக்கல்லில் அரசுப்பள்ளி மாணவர்கள் போராட்டம் எதிரொலி; உடற்கல்வி ஆசிரியர் பணியிடமாற்றம்!

 
transfer

திண்டுக்கல் மாவட்டம் கே.ராமநாதபுரம் அரசுப்பள்ளியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக பள்ளி உடற்கல்வி ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள கே.ராமநாதபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கோவிலுர், கே.ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், ஆசிரியர்கள் மாணவிகளை தாக்குவதாகவும் கூறி நேற்று பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

dindigul

தகலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில், மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து, நேற்று மாலை 20-க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

அதில், பள்ளியில் படித்து வரும் மாணவர்களை, உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் மற்றும் சில ஆசிரியர்கள் தவறாக வழிநடத்துவதாகவும், இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தினர். இந்த நிலையில், மாணவர்கள் போராட்டத்திற்கு காரணமாக கூறப்பட்ட கே.ராமநாதபுரம் அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முனியப்பனை, லிங்கவாடி அரசுப்பள்ளிக்கு மாற்றம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.