ஈரோட்டில் ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் சார்பில் மின்னணு கழிவு சேகரிப்பு திட்டம் துவக்கம்!

 
e waste

ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள் 211-இன் கீழ் மின்னணு கழிவுகள் சேகரிப்பு வாகனத்தை மாநகராட்சி மேயர் நாகரெத்தினம் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் செல்வராஜ் மாநகராட்சி ஆணையர் சிவகுமார், சி.கே. மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள் சேர்மனுமான மருத்துவர் சிவகுமார் சின்னசாமி, மாநகர நல அலுவலர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மருத்துவர் சிவகுமார் சின்னசாமி கூறியதாவது- செல்போன், கணினி, டேப் ரெக்கார்டர், சிடி போன்ற மின்னணு கழிவுப்பொருட்கள் பொது இடங்களில் கொட்டப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கும். அதிலுள்ள ரசாயனங்கள், உலோகங்கள் மண்ணுக்குள் கலந்து மண் வளம், நீர்வளத்தை கெடுக்கும். மின்னணு கழிவுகள் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பாக அப்புறபடுத்தப்பவது குறித்த நமது நாட்டில் விழிப்புணர்வு போதுமான அளவு இல்லை.

e waste

எனவே ரவுண்ட் டேபிள் அமைப்பு சார்பாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த வாகனம் ஈரோடு மாநகர பகுதியில் சுற்றிவரும். பொதுமக்கள் இ-கழிவு இருந்தால் வாகனத்தின் செல்போன் எண் 97900 99016 தொடர்பு கொண்டால் வீட்டுக்கே வந்து பொருட்களை கொண்டு செல்லும். அதை விற்று, அதில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு அரசுப்பள்ளிகளில் போதிய வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே ஈரோடு ரவுண்ட் டேபிள் சார்பில் ஆண்டுதோறும் ரூ.25 - ரூ.40 லட்சம் வரை அரசுப்பள்ளிகள் மேம்பாட்டிற்கு செலவிடப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

கல்வியின் மூலம் சுதந்திரம் என்ற இந்த திட்டம் நாடு முழுவதும் அமலாக்கப்படுகிறது. கடந்தாண்டு அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்த ப்ராஜெக்ட் ஹீல் என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் நடப்பாண்டு முதல் அரசு மருத்துவமனைகளளை மேம்படுத்த தேவையான உபகரணங்கள் வாங்கி தர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.