அவினாசியில் கட்டிடம் இடிக்கும் பணியின்போது விபத்து - கிரேன் உதவியாளர் பலி!

 
dead body

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கட்டிடத்தை இடிக்கும் பணியின்போது கான்கிரீட் சட்டம் இடிந்து விழுந்ததில் கிரேன் ஓட்டுநரின் உதவியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த சின்னத்தம்பி மகன் சிவகுமார்(20). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ஆட்டையம்பாளையம் பகுதியில் தங்கி கிரேன் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று அவினாசி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள உணவகத்தின் பழைய கட்டிடம் இடிக்கும் பணிக்காக, கிரேன் ஓட்டுநருடன், சிவகுமார் சென்றிருந்தார்.  கட்டிடத்தின் முன் பகுதியில் இருந்த கான்கிரீட் சட்டத்தை அகற்றுவதற்காக,  சிவகுமார் கான்கிரீட் சட்டத்தின் மீது ஏறி பெல்ட்டை மாட்ட முயன்றுள்ளார்.

avinashi

அப்போது, எதிர்பாராத விதமாக  கான்கிரீட் சட்டம் சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சிவகுமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த, அவினாசி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.