கம்பத்தில் கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

 
dead

தேனி மாவட்டம் கம்பத்தில் கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிலையம் கீழ்புறத்தில் உள்ள சிவனடியார் மடம் அருகே வசிப்பவர் கருப்பசாமி(35). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், முகைத்(4) என்ற மகனும், ஒரு வயதில்  யுகனிகா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கருப்பசாமி, நேற்று கம்பம் காவலர் குடியிருப்பு அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். மதிய உணவின்போது கருப்பசாமி மனைவியிடம் செல்போனில் பேசிய படி மாடிக்கு சென்றுள்ளார்.

cumbum

பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் கீழே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, கருப்பசாமி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை அடுத்து, அவர்கள் கருப்பசாமியை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கருப்பசாமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த கம்பம் தெற்கு போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கருப்பசாமி உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.