திருப்பத்தூர் மாவட்டத்தில் மே 1-ல் மதுக்கடைகள் மூடல்!

 
tasmac

திருப்பத்தூர் மாவட்டத்தில் மே தினமான வரும் 1ஆம் தேதி அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மாநில வாணிப  கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான  கடைகளை ஒட்டி உள்ள மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் ஆகியவைகள் அனைத்தும் மே 1ஆம் தேதி (மே தினம்) அன்று மூடிவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981-இல் கூறப்பட்டுள்ளது. 

எனவே, மேற்படி நாட்களில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள பார்கள் மற்றும் FL1/FL2/FL3/FL3A/FL3AA/FL11 உரிமம் வழங்கப்பட்டுள்ள மது விற்பனையகங்கள், அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும், அன்றை தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

tirupattur

மேற்படி நாளில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதேபோல் அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான கூடங்கள் திறக்கப்பட்டிருந்தாலும், மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தாலும், மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மதுக்கூட உரிமதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.