ஈரோட்டில் காலை சிற்றுண்டி திட்டத்தை துவங்கி வைத்த ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி!

 
anna

ஈரோடு மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆட்சியர் கிருஷ்ணனுன்னி துவங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். 

தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மதுரையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நேற்று முதற்கட்டமாக அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் துவங்கப்பட்டது.  இதன்படி, ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மாநகராட்சியில் 26 பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரம் 523 மாணவ மாணவிகள், தாளவாடி மலைப்பகுதியில் 38 பள்ளிகளைச் சேர்ந்த 768 மாணவ மாணவிகள் என மொத்தம் 3 ஆயிரத்து 291 மாணவ - மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்ட மூலம் உணவு வழங்கப்படுகிறது.

erode

இதனையொட்டி, ஈரோடு மாநகராட்சி கொல்லம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கலந்துகொண்டு, காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவ - மாணவிகளுக்கு கோதுமை ரவா, ரவா கேசரியை பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்தும் சாப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் கணேச மூர்த்தி எம்பி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

இதேபோல், தாளவாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட திகனாரை அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்) கலந்து கொண்டு, காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், மாணவ- மாணவர்களுக்கு உணவுகளை பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.