நாமக்கல் மாவட்டத்தில் திருட்டு போன ரூ.20 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு!

 
namakkal

நாமக்கல் மாவட்டத்தில் திருட்டு போன ரூ.20 லட்சம் மதிப்பிலான 102 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். 

நாமக்கல் மாவட்டத்தில் செல்போன் திருட்டு, காணாமல் போனது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் அளித்து இருந்தனர். இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் திருட்டு போன ரூ.20 லட்சம் மதிப்பிலான 102 செல்போன்களை போலீசார் மீட்டனர்.

cellphone

இதேபோல், இணையவழி குற்றங்கள் மூலம் பொதுமக்கள் இழந்த ரூ.1.05 லட்சம் பணத்தையும் சைபர் கிரைம் போலீசார் பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து, இன்று காலை நாமக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செல்போன்கள் மற்றும் இணைய வழியில் பணத்தை இழந்த நபர்களுக்கு, எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி மீட்கப்பட்ட செல்போன் மற்றும் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்தார். 

தொடர்ந்து, கூட்டத்தினர் இடையே பேசிய எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி, பொதுமக்கள் தங்களது செல்போன் எண்ணிற்கு வரும் தேவையற்ற குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் லிங்க்குகளை தொடர வேண்டாம் என அறிவுறுத்தினார். ஓடிபி விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அத்துடன், இணைய வழியில் பணம் திருடப்பட்டால்  உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி கூறினார்.