ஆண்டிப்பட்டி அருகே ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

 
dead body

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துசங்கிலிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் விஜயகுமார்(29). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில், விஜயகுமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், விஜயகுமார் நேற்று துங்குவதற்காக கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

andipatti

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், இன்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, விஜயகுமார் ஆட்டோவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். மேலும், அவரது உடலில் காயங்களும் காணப்பட்டு உள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராஜதானி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர். அப்போது, அவரது இறப்பில் மர்மம் உள்ளதாகவும், போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.