திருப்பூரில் ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - கல்லூரி மாணவி பலி!

 
tr

திருப்பூரில் ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அரசுக்கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சங்காயி. இவர்களுக்கு கோகிலா(21), ஜனனி(18) என 2 மகள்கள் உள்ளனர். முருகேசன் குடும்பத்துடன் திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதியில் தங்கி, அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மகள் ஜனனி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முதினம் இரவு முருகேசன் சொந்த ஊருக்கு செல்வதற்காக தனது குடும்பத்தினருடன் ஆட்டோவில் புஷ்பா சந்திப்பு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். ஆட்டோவை குணசேகரன் என்பவர் ஓட்டிச்சென்றார்.

tirupur Gh

ஹவுசிங் யூனிட் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த ஷேர் ஆட்டோ, குணசேகரன் ஆட்டோவின் மீது மோதியது.இந்த விபத்தில் முருகேசன், மகள் ஜனினி உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஜனனி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனிடையே விபத்தை ஏற்படுத்திய ஷேர் ஆட்டோ ஓட்டுநரை அந்த பகுதி பொதுமக்கள் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் திருப்பூர் பூத்தார் தியேட்டர் பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பதும், அவர் மது போதையில் ஆட்டோவை ஒட்டியதும் தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள், அவருக்கு தர்மஅடி கொடுத்து திருப்பூர் வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.