வீட்டின் பைப்லைன் வழியாக ஏறியபோது தவறி விழுந்து இளைஞர் பலி... நாட்டறம்பள்ளியில் சோகம்!

 
natrampalli

நாட்டறம்பள்ளியில் நள்ளிரவில் வீட்டின் கதவை திறக்காததால் பைப் வழியாக மேலே ஏறிய இளைஞர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வி.ஐ.பி. நகர் தாயப்ப கவுண்டர் தெருவை சேர்ந்தவர் தென்னரசு (30). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு திருமணமாகி புனிதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்னரசு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது வீடு உட்புறமாக பூட்டிவிட்டு அவரது மனைவி அமுதா உள்ளே தூங்கி கொண்டிருந்தார். இதனால் தென்னரசு காலிங் பெல்லை பல முறை அழுத்தியும், செல்போனில் பலமுறை அழைத்தும் அவர் எடுக்கவில்லை என தெரிகிறது.

natrampalli

இதனை அடுத்து, தென்னரசு வீட்டில் உள்ள பைப்லைனை பிடித்துக்கொண்டு 2-வது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு ஏற முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத தவறி கீழே விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே தென்னரசு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த புனிதா தனது உறவினர்களுக்கு தகவல் அளித்தார். அதன் பேரில அங்கு வந்த புனிதாவின் அண்ணன், தென்னரசுவுக்கு போன் செய்தபோது, வீட்டின் பின்புறம் செல்போன் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அங்கு சென்று பார்த்தபோது, தென்னரசு ரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார்.

இதனை அடுத்து, அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் தென்னரசு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.