குலசேகரம் அருகே பைக் மீது மிளா மோதியதில் தொழிலாளி பலி!

 
accident

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மிளா மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேயுள்ள மணலோடை வலியமலை பழங்குடியின குடியிருப்பை சேர்ந்தவர் வினு (28). தொழிலாளி. இவருக்கு சரண்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வினு, குலசேகரம் பகுதிக்கு வேலைக்கு சென்றுவிட்டு, வெற்றிவேல் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். வெற்றிவேல் வாகனத்தை ஓட்ட, வினு பின்னால் அமர்ந்து சென்றார். இரவு நேரத்தில் வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது அன்பு நகர் குடியிருப்பு அருகே திடீரென சாலையின் குறுக்கே மிளா ஒன்று பாய்ந்து வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

kumari gh

இதில் வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்த வினு பலத்த காயமடைந்தனர். வெற்றிவேலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வினு, பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வினு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வினுவின் தாய் விஜயகுமாரி அளித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.