ஈரோட்டில் கோவிலுக்குள் புகுந்து பணம், செல்போன் திருடிய வாலிபர் கைது!

 
robbery

ஈரோடு கள்ளுக்கடைமேடு ஆஞ்சநேயர் கோவிலில் நள்ளிரவில் புகுந்து பணம், செல்போனை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் இரவு பூஜைகளை முடித்து பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்று விட்டார். இந்த நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கோவிலிலிருந்து திடீரென சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ராஜா, முகமது, சக்தி, முருகன் மற்றும் சிவசக்தி ஆகியோர் கள்ளுக்கடை மேடு ஆஞ்சநேயர் கோவிலுக்கு விரைந்து சென்றனர். 

erode

அப்போது, கோவிலுக்குள் மர்மநபர் யாரோ இருப்பதை அறிந்த போலீசார், கோவில் அலுவலக அறைக்குள் பதுங்கி இருந்த அந்த நபரை மடக்கிப்பிடித்தனர். அந்த நபர் அறையிலிருந்த ரூ.20,240 ரொக்கப்பணம் மற்றும் 7 விலை உயர்ந்த செல்போன்களை திருடியது தெரிய வந்தது. இதனை அடுத்து கொள்ளையனை போலீசார் சூரம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அடுத்த முலையாம்பூண்டி, குமாரபாளையம் பகுதியை சேர்ந்த தங்கமுத்து மகன் சுப்பிரமணி (37) என்பது தெரியவந்தது. தறிபட்டறை தொழிலாளியான இவர் கடந்த 2 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வசித்து வருவதும் தெரிய வந்தது. 

இதனை அடுத்து, அவரிடமிருந்து பணம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சுப்பிரமணி இதேபோல் வேறு எங்கும் திருட்டில் ஈடுபட்டுள்ளாரா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.