சேலம் வழியாக ரயிலில் கடத்திய 9 கிலோ கஞ்சா பறிமுதல் - வடமாநில இளைஞர் கைது!

 
cannabis

சேலம் வழியாக சென்ற ஆலப்புழா விரைவு ரயிலில் கஞ்சாவை கடத்திச்சென்ற வடமாநில இளைஞரை கைது செய்த ரயில்வே போலீசார், அவரிடம் இருந்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று காலை சேலம் ரயில் நிலையம் வந்தடைந்த ஆலப்புழா விரைவு ரயிலில், ரயில்வே எஸ்எஸ்ஐ பாலமுருகன், காவலர்கள் முத்துவேல், சக்திவேல், அசோக்குமார் ஏறி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுப்பெட்டியில் சந்தேகத்திற்கு உரிய விதமாக இருந்த நபரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது, அவரது பையில் இருந்த பண்டல்களில் கஞ்சாவை மறைத்து கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

salem

இதனை அடுத்து, தலா 1 கிலோ எடையிலான 9 பண்டல்களில் இருந்த 9 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்தியது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த சிவசங்கர் தாகூர் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் கஞ்சாவை ஈரோட்டுக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, சிவசங்கர் தாகூர் மற்றும் பறிமுதல் செய்த கஞ்சா சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.