தருமபுரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.7.90 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

 
dharmapuri

தருமபுரி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ.7.90 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் திவ்யதர்ஷினி வழங்கினார். 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த பொதுமக்கள், உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம்,  பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பேருந்து வசதி, வேலைவாய்ப்பு வீட்டுமனை பட்டா, புதிய மின் இணைப்பு வசதிகள்,தரைமட்டப் பாலம்,  முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகைகள், 3 சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் 458 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு  உரிய தீர்வை உடனுக்குடன் வழங்கிட உத்தரவிட்டார்.

தொடர்ந்து, கடந்த 19ஆம் தேதி தருமபுரிக்கு வருகை தந்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம், பாலக்கோடு வட்டம் கண்ணுகாரம்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கிருஷ்ணன் என்பவர் காதொலி கருவி வேண்டி விண்ணப்பித்திருந்தார். அவருடன், நேற்றை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விண்ணப்பித்த பாலக்கோடு வட்டம் நம்மாண்டஅள்ளியை சேர்ந்த சேகர் என்பவருக்கும் ரூ.7,500 மதிப்பிலான காதொலி கருவிகளை ஆட்சியர் திவ்யதர்ஷினி வழங்கினார். மேலும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மிகவும் பின்தங்கிய சமூகமான இருளர் சமுதாய மக்களுக்கு, அவர்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்  பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சியை சேர்ந்த  10 இருளர்கள் சமூக மக்களுக்கு  தனி நபர் கடனாக ரூ10 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

dharmapuri

மேலும், அரூர் வட்டம் கொங்கவேம்பு எஸ்.பட்டியை கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி பேருந்துக்காக நின்றிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் பலியான 3 பேரின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வரப்பெற்ற  ரூ.2 லட்சம் வீதம் ரூ.6 லட்சம் காசோலையையும், பலத்த காயமடைந்த ஒருவருக்கு ரூ.50 ஆயிரம், சிறு காயமடைந்த ஒருவருக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகளும் என மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.7.90 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிரபு, தனித்துணை வட்டாட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) சாந்தி, உதவி ஆணையர் (கலால்) தணிகாச்சலம் உ ள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.