குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி... திருப்பத்தூர் அருகே சோகம்!

 
dead

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே திறந்த நிலையில் இருந்த குடிநீர் தொட்டிக்குள் தவறிவிழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் ஆலமரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமலை. இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களது 4 வயது மகன் லிங்கராஜ். நேற்று சிறுவன் வீட்டில் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது, வீட்டின் வெளியே மூடாமல் இருந்த குடிநீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கினான். நீண்ட நேரமாக சிறுவனை காணாததால் சந்தேகமடைந்த பெற்றோர் அவனை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, அவன் குடிநீர் தொட்டிக்குள் மயங்கிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

tirupattur

அவர்கள் உடனடியாக சிறுவன் லிங்கராஜை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே லிங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து, தந்தை திருமலை அளித்த புகாரின் அடிப்படையில் ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் தொட்டிக்கு தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.