எடப்பாடியில் வீட்டில் குட்கா பதுக்கிய 3 பேர் கைது: ரூ.47 ஆயிரம் மதிப்பிலான குட்கா, பைக் பறிமுதல்!

 
edappadi

சேலம் மாவட்டம் எடப்பாடியில் வீட்டில் பதுக்கி வைத்த ரூ.47 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், எடப்பாடி காவல் உதவி ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை எடப்பாடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள குளாலர் தெருவில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷேத்தாராம் என்பவரது வீட்டில் இருந்த மூட்டைகளை 2 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருப்பதை கண்ட போலீசார் அவர்களை பிடித்து சோதனையிட்டனர்.

gutka

அப்போது, மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் கூல்லீப் ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் ஷேத்தாராமின் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது, அங்கு 6 மூட்டைகளில் ரூ. 47,136 மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்தியது தொடர்பாக ஷேத்தாராம், கே.ஆர் தோப்பூரை சேர்ந்த சீனிவாசன் மற்றும் வெள்ளாண்டி வலசு பகுதியை சேர்ந்த புருசோத்தமன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.