பவானிசாகர் அணையிலிருந்து 2,500 கனஅடி நீர் வெளியேற்றம்... 3-வது நாளாக கொடிவேரி அணையில் குளிக்க தடை!

 
kodiveri2

பவானி ஆற்றில் வினாடிக்கு 2500 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், நேற்று 3-வது நாளாக கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.  கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

இந்த ஆண்டில் 2 -வது முறையாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டி உள்ளது. தொடர்ந்து மீன் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி 103 அடி எட்டிய உடனே பவானிசாகர் அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு உபரி நீராக திறந்து விடப்பட்டது. இதனால் பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  பவானிசாகர் பகுதியில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் நேற்று முன்தினம் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவும் குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 103 அடியில் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 307 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

kodiveri

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1500 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு ஆயிரம் கன அடியும் என மொத்தம் 2 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  இந்நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கொடிவேரி அணையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி நேற்று மூன்றாவது நாளாக கொடிவேரி அணையில்  சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை நெருங்கி உள்ளதால் 20,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி ஆற்றங்கரை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையோரம் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்தப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி மக்களுக்கு அருகே உள்ள திருமண மண்டபங்களில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நிலைமையை வருவாய்த் துறையினர், பொதுப்பணித் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.