நாகர்கோவிலில் மின்சாரம் பாய்ந்து 2 இளைஞர்கள் பலி... மின்ஒயர்களை திருடியபோது சோகம்

 
electric shock

நாகர்கோவிலில் பூட்டிய வீட்டில் மின்சார ஒயர்களை திருட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள மீட் தெருவில் பயன்பாட்டில் இல்லாத பூட்டிய நிலையில் வீடு ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த வீட்டின் அருகே 2  இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதாக வடசேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, வீட்டிற்கு வரும் மின்இணைப்பை துண்டித்துவிட்டு, இருவரது உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

kumari

அப்போது, உயிரிழந்தவர்கள் கருங்கல் பகுதியை சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர் என்கிற ராபர்ட் மற்றும் கோட்டார் பறைக்கால்மடம் பகுதியை சேர்ந்த டான் போஸ்கோ என்பது தெரிய வந்தது. நண்பர்களான இருவர் மீதும் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.  மேலும், இருவரும் சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று பயன்பாட்டில் இல்லாத வீட்டிற்குள் புகுந்து மின்சார ஒயர்களை திருடி உள்ளனர். 

அப்போது உடலில் ஒயர்களை சுற்றியபடி, வீட்டில் இருந்த “ஸ்டே” கம்பியையும் அறுக்க எடுக்க முயன்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து ராபர்ட் மற்றும் ஜான் பாஸ்கோ ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சார ஒயர் திருடச்சென்றபோது மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது