திருவெண்ணெய்நல்லூர் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து பெண் உள்பட இருவர் பலி!

 
accident

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில்  பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 25 பேர், அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற இறப்பு நிகழ்ச்சிக்காக இன்று காலை சரக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். திருவெண்ணைநல்லூர் அடுத்த பெரியசெவலை பகுதியில் சென்றபோது எதிரே இருசக்கர வாகனம் வந்ததால், அதன் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் வாகனத்தை திருப்ப முயன்றார். அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

vilupuram

இந்த விபத்தில், மேட்டுக்குப்பத்தை சேர்ந்த சேகர் என்கிற சேட்டு மற்றும் தேன்மொழி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்த கிராமமக்கள் மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், அவர்கள் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த தேன்மொழி, சேட்டு ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சரக்கு வாகனத்தில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச்சென்றதால் விபத்து நேரிட்டது தெரியவந்துள்ளது.