கடலூர் அருகே பாலாற்று வெள்ளத்தில் மூழ்கி பெண் உள்பட இருவர் பலி - ஒருவர் மாயம்!

 
drowning

கடலூர் அருகே பாலாற்று வெள்ளத்தில் குளித்த பெண் உள்பட இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர் அருகே உள்ள முள்ளிகிராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது பிள்ளைகள் இரட்டை குழந்தைகளான மாதவன்(21) மற்றும் அவரது சகோதரி மாளவிகா(21). இவர்களில் மாளவிகா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தார். இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ்வரன்(18). கல்லூரி மாணவர்.  இவர்கள் மூவரும் நேற்று முள்ளிகிராம்பட்டி கிராமத்தின் அருகே செல்லும் பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சென்று குளித்து கொண்டிருந்தனர். 

cuddalore

அப்போது, ஆற்றில் மணல் அள்ளியதால் ஏற்பட்ட பள்ளத்தில் திடீரென லோகேஷ்வரன் மூழ்கினார். இதனை கண்ட மாதவனும், அவரது சகோதரி மாளவிகாவும் அவரை காப்பாற்ற முயன்றனர்.  அப்போது, எதிர்பாராத விதமாக 2 பேரும் ஆற்றில் மூழ்கினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர், நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, லோகேஷ்வரன், மாளவிகா ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.

தொடர்ந்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக  கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாயமான மாதவனின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாலாற்று வெள்ளத்தில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தும், ஒருவர் மாயமானதும் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கடலூர் மாவட்டத்தில் மழை மற்றும் ஆற்று வெள்ளத்தில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.