16 வயது சிறுமி கர்ப்பம் - கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு!

 
police

நெல்லை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நெல்லை அருகே உள்ள கீழபாலாமடை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (29). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்தாண்டு ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் திருமணம் நடந்தது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அந்த சிறுமியை பிரசவத்திற்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு பிரசவத்தில் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் அந்த சிறுமி குறித்து விபரங்களை சேகரித்த போது, அவருக்கு 16 வயதே பூர்த்தியானது தெரியவந்தது.

nellai

இதனால் அதிர்ச்சியடைந்த சுகாதார ஊழியர் முத்துலெட்சுமி, இதுகுறித்து நெல்லை தாலுகா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், 16 வயதான சிறுமிக்கு திருமணம் செய்து, குழந்தை பிறந்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, சிறுமியின் கணவர் கணேசன் (29), தாயார் ஆயிரத்தம்மாள், சகோதரன் மணிகண்டன் மற்றும் உறவினர்களான கீழபாலாமடையை சேர்ந்த செல்லப்பா, ஆறுமுகக்கனி, லில்லி ஜெபமணி ஆகிய 6 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.