ஒட்டன்சத்திரம் அருகே குடோனில் பதுக்கிய 1,392 மதுபாட்டில்கள், 196 கிலோ குட்கா பறிமுதல் - மூவர் கைது!

 
gutka

ஒட்டன்சத்திரம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1,392 போலி மதுபான பாட்டில்கள் மற்றும் 196 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள தும்பிச்சம்பட்டி புதூரில் தோட்டத்து குடோனில் கூல்ட்ரிங்ஸ் வியாபாரம் செய்து வருபவர் குப்புசாமி (44). இவரது குடோனில் மதுபான பாட்டில்கள் மற்றும் குட்கா பொருட்கள் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதன் பேரில் ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜசேகர், உதவி ஆய்வாளர்கள் சரவணகுமார், இளஞ்செழியன் அடங்கிய தனிப்படை போலீசார், குப்புசாமியின் தோட்டத்து குடோனில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

arrested

அப்போது, அங்கு சட்டவிரோதமா விற்பனை செய்ய வைத்திருந்த 1,392 போலி மதுபான பாட்டில்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட 196.32 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குட்காவின் மதிப்பு சுமார் ரூ.1.31 லட்சம் ஆகும். தொடர்ந்து மதுபாட்டில்கள் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கியது தொடர்பாக குப்புசாமி, ஒட்டன்சத்திரம் சாலைபுத்துரை சேர்ந்த மோசஸ் பெனிடா மற்றும் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த சையது முகமது என்கிற முஸ்தபா ஆகியோரை கைதுசெய்தனர். தொடர்ந்து, 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.