திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

 
trichy nit

திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

திருச்சியில் மத்திய அரசின் மனிவள மேம்பாட்டுத்துறையின் கீழ் என்.ஐ.டி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், என்.ஐ.டி கல்லூரியில் 3ஆம் ஆண்டு வகுப்பு படிக்கும் 2,500 மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.

corona virus

கல்லூரியில் விடுமுறை முடிந்து தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 577 பேர், செய்முறை பயிற்சிக்காக கல்லூரிக்கு வந்தனர். அவர்களுக்கு கல்லூரி நுழைவு வாயில் முன்பு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 10 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, அவர்கள் அனைவரும் என்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் உள்ள  மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இவர்களை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், மாணவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஒமிக்ரான் தொற்று உள்ளதா? என கண்டறிவதற்காக பரிசோதனைக்கு பெங்களூரு ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கல்லூரியில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து என்.ஐ.டி நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.