முன் அறிவிப்பு இன்றி பணி நீக்கம்… அம்மா உணவக ஊழியர்கள் சாலை மறியல்!

 

முன் அறிவிப்பு இன்றி பணி நீக்கம்… அம்மா உணவக ஊழியர்கள் சாலை மறியல்!

திண்டுக்கல்

திண்டுக்கலில் முன்னறிவிப்பு இன்றி பணியில் இருந்து நீக்கியதை கண்டித்து, அம்மா உணவக பெண் ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் நகரில் அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் பணிபுரியும் 24 பெண் ஊழியர்களை நேற்று, முன்னறிவிப்பு இன்றி திடீரென பணியில் இருந்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெண்களிடம் தெரிவித்து உள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், தங்களை பணியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முன் அறிவிப்பு இன்றி பணி நீக்கம்… அம்மா உணவக ஊழியர்கள் சாலை மறியல்!

பின்னர், திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அப்போது, இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் சென்று முறையிடும் படி போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மறியல் போராட்டம் காரணமாக திண்டுக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.