darbar
  • January
    26
    Sunday

Main Area

Mainஅட்லியாய் இருப்பதன் சிரமம் , அட்லிக்குத்தான் தெரியும்..! தமிழ்சினிமாவின் கதைகள் பிறந்து வளர்ந்த கதை!

அட்லி
அட்லி

ஆரம்பகால சினிமாவுக்கும் , மேடைநாடகத்துக்கு உள்ள வித்தியாசம் இரண்டுதான்.நாடகத்தில் குளோஸ் - அப்பும் எடிட்டிங்கும் இல்லை.மற்றபடி அதேதான் இது என்று தீர்மானித்து,அரிச்சந்திர மயானகாண்டத்தில் தொடங்கி வள்ளி திருமணம் வரை எல்லா நாடகங்களையும்,முடிந்த வரை அதே நடிகர்களை வைத்து எடுத்துத் தள்ளினார்கள்.

bagavarthar chinappa

அந்தக் காலகட்டத்தின் கதாநாயர்களுக்கு பாடத் தெரிய வேண்டும் என்பதே முக்கியத் தகுதியாக இருந்தது.அதனால்த்தான் விஜய் போல எல்லா படத்திலும் ஒரே கெட்டப்பில் வந்த பாகவதரும்,பி.யூ சின்னப்பாவும் அன்று சூப்பர்ஸ்டார்கள் ஆக முடிந்தது.அதேபோல எம்.எஸ் சுப்புலட்சுமியும் , கே.பி சுந்தராம்பாளும்  நடிகையர் ஆனதும் அவர்களின் பாட்டுத் திறத்தால்தான்.

இந்த பாடகர்களுக்குப் பிறகுதான் தமிழ் சினிமா புதிய கதைகளைத் தேடத் துவங்குகிறது. இந்தக் காலகட்டத்தின் நாயகன் எம்.கே.ராதா.அன்றைய இயக்குநர்கள்தான் முதன் முதலில் அட்லி,முருகதாஸ் வழியில் கதைதேடியவர்கள்.ஆனாலும் இவர்களைப்போல அப்படியே சாப்பிடாமல் கொஞ்சம் உழைத்து இருக்கிறார்கள். உதாரணமாக 1948-ல் ஜெமினி எஸ்.எஸ் வாசன் தயாரிப்பில் வெளிவந்த சந்திரலேகா ( Chandraleha )படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்,அன்றே அதன் பட்ஜெட் 30 லட்சம்.பிரமாண்ட செட்டுகளுக்கு காசை வாரி இறைத்த வாசன் கதையை சுட்டது பிரஞ்ச் கொள்ளைக்காரன் என்கிற ஒரு ஆங்கில நாவலில் இருந்து.(French bandit by George w.m.Reynolds) இந்தி,தமிழ்,சிங்களம்,ஜப்பான் என்று பல மொழிகளில் வெளியிடப்பட்டு பெரு வெற்றி பெற்ற படம் அது.

chandralekha

அந்த அளவு செலவு செய்ய முடியாதவர்கள் தேர்ந்தெடுத்த வழிதான், மாயாஜாலக் கதைகள்.அந்த வகையில் முதல் வெற்றியைச் சுவைத்த படம் பாதாள பைரவி ( pathala bhairavi) 195-ல் வெளிவந்த இந்தப் படத்தில்தான் என்.டி.ஆர் , ரங்காராவ் இணை அறிமுகமாகி கால் நூற்றாண்டுகாலம் தெலுங்கு சினிமாவை ஆண்டது.1954ல் வாழ்ந்த முருகதாஸ்தான் எஸ்.பாலச்சந்தர். அகிரோ குரோ குரேசாவாவின்,ரோஷமான் படத்தை அந்த நாள் என்றும்,ஹிட்ச்காக்கின் சபாட்டேஜை பொம்மை என்றும் எடுத்துக்கொண்டு இருந்தார்.

தமிழச்சினிமாவின் இந்த நிலமையை மாற்றியது 50 களின் துவக்கதில் சினிமாவில் நுழைந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள்தான் இளங்கோவன், பாரதிதாசன்,அண்ணா துரை,கருணாநிதி, ஆசைத்தம்பி,முரசொலி மாறன் என ஒரு படையே நுழைந்து தமிழ்சினிமாவின் போக்கையே மாற்றினார்கள். அதுவரை நினைத்தும் பார்க்காத சமூக சீர்திருத்தக் கதைகள் சினிமாவாயின.
நடிகர்களிலும் என்.எஸ் கிருஷ்ணன்,எம்.ஜி.ஆர்.எம்.ஆர்.ராதா,சிவாஜி,எஸ்.எஸ் ஆர் என்று திராவிட இயக்கத்தினர் கைக்குப் போய்விட்டது தமிழ் சினிமா. சரித்திரப் பட நாயகர்கள் கூட பகுத்தறிவு வசனம் பேசத் துவங்கிவிட்டார்கள். அதனால்,மற்றவர்கள் வேறு வழியின்றி கட்டபொம்மன்,போன்ற சரித்திர நாயகர்கள்,திருவிளையாடல் போன்ற புராணக்கதைகளை படமாக்கினார்கள். பீம்சிங் ஒருவர் மட்டுமே தனது 'பா' வரிசைப் படங்களால் தனிக்கொடி உயர்த்தி இருந்தார்.

kattabomman

எழுபதுகளில் திராவிட இயக்க எழுத்தாளர்கள் அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏக்களாகவும் ஏன் முதல்வராகவும்கூட ஆகி விட்டதால் சினிமாவுக்குப் புதுரத்தம் தேவைப்பட்டது. அப்போது வந்தவர்கள்தான் ஸ்ரீதர், பாலச்சந்தர், எஸ்.பாலச்சந்தர்,பாரதிராஜா பாலுமகேந்திரா ஆகிய புதுமைப் பித்தர்கள். அதிலும்,பாலு மகேந்திராவும் பெரும்பாலும் மேற்கத்திய சினிமாவிடமிருந்து இரவல் பெற்ற கதைகளைத்தான் எடுத்தார்கள்.இதிலும் பாலு மகேந்திரா ஹிட்ச்காக்கின் சைக்கோ போன்ற படங்களை ஆரத்தழுவியவத்தான்.
பாரதிராஜாவே அவ்வப்போது இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்தான்.
ஆனாலும்,இவர்களோடு மகேந்திரனும் வந்து சேர்ந்துகொள்ள,எழுபதுகளில் தமிழ் சினிமா பல புதிய உச்சங்களை தொட்டது.ஆனால்,அது நீண்டகாலம் நீடிக்கவில்லை.டி.ராஜேந்தரும்,எஸ்பி முத்துராமனும் தமிழ் சினிமாவை மீண்டும் பழைய பாதையில் திருப்பி விட்டனர்.

directors

சகலாகலா வல்லவனும்,முரட்டுக்காளையும் சேர்ந்து தமிழ் சினிமாவை வெகுதூரம் பின்னால் கொண்டு போனார்கள்.டி.ராஜேந்தரும் , ஆர்.சுந்தரராஜனும் இளையராஜா புன்னியத்தில்  மைக்கை ஹீரோவாக வைத்து ஆளுக்கு அரைடஜன் படம் எடுத்தார்கள்.ஆரம்பத்தில் போராடிப்பார்த்த பாக்கியாஜும் வெற்றிக்கு முருங்கைகாயை நம்ப வேண்டிய நிலை வந்தது.

ஒருவகையில் இன்றைய கதைத் திருட்டுகளுக்கான காரணம் டி ராஜேந்தர்தான்.அவர்தான் முதன் முதலில் தனது படங்களின் போஸ்ட்டரில், கதை,திரைக்கதை,வசனம்,இசை,ஒளிப்பதிவு, இயக்கம் டி.ராஜேந்தர் என்று போட்டுக் கொண்டவர்.அடுத்த நாளே இதுதான் பெருமிதத்தின் உச்சம் என்று தமிழ் இயக்குநர்கள் முடிவெடுத்து எல்லோருமே சகலகலா வல்லுனர்கள் ஆகிவிட்டார்கள்.

t rajendran

சரக்கு இருப்பவர்கள் தப்பித்துக் கொண்டார்கள்,இல்லாதவர்கள் திருடத்தொடங்கினார்கள்.தெலுங்கு,இந்தி,மலையாளம்,கன்னடம் என்று அக்கம் பக்கத்து வீடுகளில் கன்னம் வைத்தார்கள்.மணிரத்தினம் போன்றவர்கள் ஆங்கிலத்தில் இருந்தும் ஃபிரஞ்சில் இருந்தும் அள்ளி வந்தார்கள்.அதுதான் இப்போது வரை தொடர்கிறது.

கடைசியாக கதைத்திருட்டைப் பற்றி சினிமாக்காரகளிடையே உலவும் ஒரு சின்னக்கதை.ஒரு படம்.தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றதாம்.அதில் நாயகி டாக்டர், நாயகன் வக்கீல். ஒரு தமிழ் தயாரிப்பாளர் அந்த தெலுங்கு தயாரிப்பாளரை அனுகி தமிழ் ரீமேக் உரிமை கேட்டாராம்.அந்த தெலுங்குத் தயாரிப்பாளர் கேட்ட ராயல்ட்டி தொகை மிகவும் அதிகமாக இருந்ததாம். சத்தமில்லாமல் ஊர் திரும்பிய தயாரிப்பாளர் அவருக்குக் கைகடக்கமான ஒரு இயக்குநரை கூப்பிட்டு படத்தை போட்டுக்காடி இதை 'உல்ட்டா ' பண்ணு என்றாராம்.உல்ட்டா என்பது கதைத்திருட்டுக்கான கோட் வேர்டு!.உடனே தமிழ் இயக்குநர் ஹீரோயின்  வக்கீல், ஹீரோ டாக்ட்டர் என்று 'உல்டா' செய்து படத்தை எடுத்து விட்டார்.படமும் ஹிட்!

ஆனால்,அடுத்த வாரமே ஒரு இந்தி தயாரிப்பாளர் தமிழ் தயாரிப்பாளர் மேல் கதையை திருடி விட்டதாக கேஸ்போட்டு விட்டாராம்.அப்போதுதான்,தெலுங்குத் தயாரிப்பாளரும் இவர்களைப் போலவே இந்திப்படத்தைப் பார்து உல்ட்டா செய்தது தெரிந்ததாம்.இப்படி, கொரிய தயாரிப்பாளர்கள் கேஸ்போடத் துவங்கினால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கவே தலை சுற்றுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.