இயற்கையான முறையில் முடி வளர… இதை டிரை பண்ணிப் பாருங்கள்!

 

இயற்கையான முறையில் முடி வளர… இதை டிரை பண்ணிப் பாருங்கள்!

நீளமாக முடி வளர வேண்டும் என்பது ஒன்றிரண்டு பேரைத்தவிர்த்து ஒவ்வொரு பெண்ணின் கனவாக இருக்கிறது. இதற்காக யூடியூப் சேனலில் பலரும் சொல்வதை எல்லாம் செய்வது, கடைகளில் விற்கும் கண்ட கண்ட க்ரீம், ஷாம்பு, ஆயில் தடவுவது என்று விடாமல் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றனர்.

இயற்கையான முறையில் முடி வளர… இதை டிரை பண்ணிப் பாருங்கள்!

நம்முடைய தலையில் லட்சக் கணக்கான முடிகள் உள்ளன. இவற்றின் வேருக்கு போதுமான ரத்த ஓட்டம் அதன் மூலம் போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதன் மூலம் அவை ஆரோக்கியமாக வளரும் என்கின்றனர் தோல் நோய் சிகிச்சை நிபுணர்கள். இந்த லட்சத்திலிருந்து ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடி உதிர்வது இயற்கையானதுதான். அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று நம்பிக்கை அளிக்கின்றனர் மருத்துவர்கள்.

முடி ஆரோக்கியமாக மிக நீண்டு வளர அடிப்படையாகச் செய்ய வேண்டியவை பற்றி மருத்துவர்கள் கூறுவதைப் பார்ப்போமா…

முடி வளர்ச்சிக்கு அடிப்படை புரதம் தான். நம்முடைய முட 95 சதவிகிதம் கெரட்டின் என்ற ஒரு வகை புரதத்தாலும் 18 வகையான அமினோ அமிலங்களாலும் உருவானவை. அப்படி என்றால் எந்த அளவுக்கு புரதச்சத்து முக்கியம் என்பதை புரிந்துகொள்ளலாம். ஆரோக்கியமான உயர் தர புரதச் சத்தை எடுத்துக்கொள்வது முடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். முட்டை, பால், பனீர், யோகர்ட், சீஸ், கோழி இறைச்சி, சிறுதானியத்தில் ஒன்றான சாமையில் உயர்தர புரதச்சத்து உள்ளது.

அடுத்ததாக முடியின் வளர்ச்சிக்கு அவசியமானது பயோட்டின் என்ற பி வைட்டமின். பயறு, பாதாம், அக்ரூட், காலிஃபிளவர், கேரட் போன்றவற்றில் பயோட்டின் உள்ளது. இதை தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம் முடிக்குத் தேவையான சத்து கிடைக்கும்.

இரும்புச்சத்துதான் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு அவசியம் என்று நமக்குத் தெரியும். போதுமான ஹீமோகுளோபின் இருந்தால்தான் முடியின் வேர்ப்பகுதிக்குத் தேவையான ஊட்டச்சத்து கொண்டுபோய் சேர்க்க முடியும். இரும்புச் சத்தில் உள்ள ஃபெர்டின் என்ற பொருள் முடி வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இதன் பற்றாக்குறை முடி உதிர்வு உள்ளிட்டவைக்கு காரணமாகிவிடுகிறது. எனவே, இரும்புச்சத்து மிக்க உணவு எடுத்துக்கொள்வது அவசியம்.

முடி வளர்ச்சிக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் முக்கிய தேவையாக உள்ளது. இது ஆரோக்கியமான சருமம், சருமத்தின் மேல்பகுதியின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. முடி உறுதியாக இருக்க, வேர்ப்பகுதி சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி இயற்கையான முறையில் ஊட்டச்சத்து உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியும். கண்ட கண்ட ஆயில், பவுடரை நம்புவதை விட இந்த எளிய ஆரோக்கியமான வழியைப் பின்பற்றலாமே!