ஜெ.அன்பழகன் வீட்டில் பிரபாகரன் தங்கினாரா? வரலாறு திரிக்கப்படுகிறது – இயக்குநர் அமீருக்கு பத்திரிகையாளர் மறுப்பு

 

ஜெ.அன்பழகன் வீட்டில் பிரபாகரன் தங்கினாரா? வரலாறு திரிக்கப்படுகிறது – இயக்குநர் அமீருக்கு பத்திரிகையாளர் மறுப்பு

ஜெ.அன்பழகன் வீட்டில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக இயக்குநர் அமீர் கூறியதற்கு பத்திரிகையாளர் ஏகலைவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் பா.ஏகலைவன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“1982-ம் ஆண்டு மே 19ம் தேதி அன்று பாண்டிபஜார் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. அது பற்றி “என் பெயர் கரிகாலன்” என்ற பதிவை இங்கே முகநூலில் விரிவாக எழுதியிருந்தேன். தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் அப்போது பிரபலமடையாத நேரம். இன்று திமுக-வின் செய்தித் தொடர்பாளராக இருக்கும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அப்போது பழ நெடுமாறன் அவர்களுடன் காமராஜர் காங்கிரஸ் கட்சியுடன் இருந்தார். நெடுமாறன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஓரிருவரைத் தவிர மற்றவர்களுடன் தலைவருக்கு பழக்கமோ- அறிமுகமோ இல்லாத நேரம்.

ஜெ.அன்பழகன் வீட்டில் பிரபாகரன் தங்கினாரா? வரலாறு திரிக்கப்படுகிறது – இயக்குநர் அமீருக்கு பத்திரிகையாளர் மறுப்பு
துப்பாக்கிச்சூடு நடந்து, தலைவர் கைதான உடன் காவல் நிலையத்தில் இருந்து கே.எஸ்.ஆர். அவர்களுக்கு ஒரு தொலைப்பேசி. ஆங்கில நாளேட்டு நிருபர், “கைதான நபர் காவல் நிலையத்தில் உங்கள் பெயரைச் சொல்லியிருக்கின்றாராம்” என்கிறார். விழுந்தடித்துக்கொண்டு ஒரு ஆட்டோவைப் பிடித்து பாண்டிபஜார் காவல் நிலையம் சென்றார் கே.எஸ்.ஆர். காரணம் தலைவர் அப்போது ராதாகிருஷ்ணன் அவருடைய வீட்டில்தான் தங்கியிருந்தார். அந்த வீடு மைலாப்பூர் சாலைத் தெருவில் இருந்தது.
காவல் நிலையம் சென்றவுடன், ‘சார் இவர்கள் எல்லாம் சிலோன் நக்ஸலைட் போல இருக்கு. துப்பாக்கியால் சண்டை போட்டுக் கொண்டார்கள்” என்றுதான் ஆய்வாளர் கூறுகிறார். அவர்கள் எல்லாம் விடுதலைக் கேட்டுப்போராடும் இயக்கத்தினர் என்ற விவரத்தைக்கூற, பிறகு சம்பிரதாய விடயங்கள் நடந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே இருந்த மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார்கள். அதுவரையிலும் கே.எஸ்.ஆர். மட்டுமே உடன் இருக்கின்றார்.

ஜெ.அன்பழகன் வீட்டில் பிரபாகரன் தங்கினாரா? வரலாறு திரிக்கப்படுகிறது – இயக்குநர் அமீருக்கு பத்திரிகையாளர் மறுப்பு
தகவல் அறிந்து அன்று இரவே மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த பழ.நெடுமாறன் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்கின்றார். பிரபாகரன் அவர்களை சிலோனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்று அதிபராக இருந்த ஜெயவர்தனே கூற, “அப்படி அனுப்பி வைக்கக்கூடாது” என்ற முனைப்பில் இறங்கினார் நெடுமாறன் அவர்கள். முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்க மனு தாக்கல் செய்யப்ப்பட்டது. ஆகஸ்ட்டு 6-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் கே.எஸ்.ஆர், பழ.நெடுமாறன், வானமாமலை உள்ளிட்டவர்கள் நேர்நின்றிருந்தார்கள். ஜாமீன் கிடைத்தது.
அதுவரை நாயாய்ப் பேயாய் அலைந்து திரிந்து போராடிப் பெற்றவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்தான். வழக்கும் அவர் பெயரில்தான் தாக்கல் செய்யப்பட்டது. கே.எஸ்.ஆருக்கு பின்புலமாக பழ-நெடுமாறன் இருந்தார். நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் வானமாமலை அவர்கள் வாதாடினார். மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் தினசரி கையொப்பம் இடவேண்டும் என்பதுதான் நிபந்தனை. அதன்படி 7-ம் தேதி அன்று தலைவர் பிரபாகரன் அவர்களை மதுரைக்கு அழைத்துச் சென்றார் பழ.நெடுமாறன். அவரது வீட்டில் தங்கிக்கொண்டுதான் அடுத்த நாள் எட்டாம் தேதியிலிருந்து தினசரி காவல் நிலையம் சென்று கையொப்பமிட்டுக் கொண்டிருந்தார் தலைவர் பிரபாகரன்.

ஜெ.அன்பழகன் வீட்டில் பிரபாகரன் தங்கினாரா? வரலாறு திரிக்கப்படுகிறது – இயக்குநர் அமீருக்கு பத்திரிகையாளர் மறுப்பு
உண்மை இப்படி இருக்க, அவரை திமுக பிரமுகரும் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த ஜெ. அன்பழகன்தான் ஜாமீன் எடுத்து, அவரது தி.நகர் அலுவலகத்திலேயே 21 நாட்கள் தங்க வைத்துக்கொண்டிருந்தார் என்கிறார் இயக்குநர் அமீர் அவர்கள். அதாவது அப்படியான தகவலை மறைந்த ஜெ.அன்பழகன் அவர்கள் சொன்னதாக கூறுகிறார். நிபந்தனையே ‘மதுரையில் தங்கி கையொப்பமிட வேண்டும்’ என்பதுதான். அப்படியிருக்க சென்னை தி.நகரில் எப்படி 21 நாட்கள் தங்கியிருக்க முடியும். அந்த காலகட்டத்தில் எல்லாம் ஜெ.அன்பழகனின் தந்தையார் மறைந்த பழக்கடை ஜெயராமன் அவர்கள் பகுதிச் செயலாளர் பதவியில்தான் இருந்தார்.
பழ.நெடுமாறன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வைகோ, உள்ளிட்டவர் இன்றும் நேரடி சாட்சியாக, விவரம் அறிந்தவர்களாக உள்ளார்கள். உண்மை இப்படி இருக்க இயக்குநர் அமீர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அதுவும் அவருடையக் கருந்தாக அல்ல, மறைந்த தலைவர் ஜெ.அன்பழகன் அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார். அவர் ஏன் அப்படி உண்மைக்கு மாறாக கூறினார் என்பதும் தெரிவில்லை. உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், அடுத்த நாளே தலைவர் கலைஞர் அவர்களுடன் நேர்நின்று புகைப்படம் எடுத்து அதை முரசொலியில் வெளியிட்டு பதிவு செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என்பதோடு, அந்த காலகட்டத்தில் திமுக-நிர்வாகிகள் யாரோடும் தலைவருக்கு நேரடி தொடர்பும் இருந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.
அதன் பிறகு 1986-ம் ஆண்டு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் திருமணத்தின் போதுதான், அங்கிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். தவைலர் பிரபா அவர்கள் கலைஞருக்கு வணக்கம் கூறுகிறார். ‘பார்க்கலாம், சந்திக்கலாம்’ என்றபடியே காரில் ஏறிச்சென்றார். இந்த உண்மைகளை எல்லாம் அறியாத “பிரசாந்த் கிஷோர் உடன் பிறப்புகள் (அப்படி ஒரு பிரிவினர் இருக்கிறார்களாம்) விதம் விதமாய் வந்து பின்னூட்டம் போட்டுக்கொள்கிறார்கள்.


இப்படியான தகவல்களை எல்லாம், பணம் குவிந்திருக்கிறது என்பதற்காக பெரியார் மடத்து ஆட்கள், அமீர் சொல்லும் இப்படியான தகவல்களை எல்லாம் திரட்டி “யுனெஸ்கோ மன்ற பார்வையில் பாண்டிபஜார் துப்பாக்கிச்சூடு” என்று புத்தகம் போட்டுவிடுவார்கள். அதுதான் வரலாறு என்றும் கூறுவார்கள். காலம்தோறும் வரலாறுகள் இப்படித்தான் திரிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.