`எஸ்.பி.பி-க்கு கொரோனா பரவ நான் காரணமா?’-கண்கலங்கிய பாடகி மாளவிகா விளக்கம்

 

`எஸ்.பி.பி-க்கு கொரோனா பரவ நான் காரணமா?’-கண்கலங்கிய பாடகி மாளவிகா விளக்கம்

பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா பரவ நான்தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு பாடகி மாளவிகா வேதனையுடன் விளக்கம் அளித்துள்ளார்.

சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, எஸ்பிபி உடல் நலம் பெற வேண்டி திரையுலகத்தில் பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஐ.சி.யூ.வில் வெண்டிலேட்டர் , எக்மோ உதவியுடன் எஸ்.பி.பி.க்.கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், எஸ்.பி.பி.யின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவ்வப்போது அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இதனிடையே, எஸ்பிபிக்கு கொரோனா பாதிப்புக்கு பாடகி மாளவிகாதான் காரணம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனை மறுத்துள்ள மாளவிகா, “பாடகர் எஸ்பிபி பங்கேற்ற நிகழ்ச்சி ஜூலை 30ம் தேதி அன்று படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின் 2வது நாளில் பங்கேற்ற நான்கு பாடகிகளில் நானும் ஒருவர். ஒரு வேளை எனக்கு கொரோனா தொற்று இருந்திருந்தால் மற்ற மூன்று பாடகிகளுக்கோ அல்லது என்னுடன் ஒப்பனை அறையைப் பகிர்த்து கொண்ட நிகழ்ச்சி தொகுதிப்பாளருக்கோ கொரோனாவைப் பரப்பி இருப்பேன். கடந்த 5 மாதங்களில் பாதுகாப்புக் காரணங்களுக்காக நானோ என் குடும்பத்தினரோ வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. தொலைக்காட்சி படப்பிடிப்புக்காகத்தான் முதல்முறையாக வெளியே வந்தேன். படப்பிடிப்பில் பங்கேற்ற எஸ்பிபியும் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறிந்தவுடன் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். பரிசோதனை முடிவு ஆகஸ்ட் 8ம் தேதி கிடைத்தது. பாதுகாப்புக்காக என் குடும்ப உறுப்பினர்களும் பரிசோதனையில் பங்கேற்றார்கள். துரதிர்ஷ்டவசமாக என்னுடன் சேர்ந்து என் தந்தை, என் தாய், என் மகள் என அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என் கணவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. நாங்கள் கடினமான சூழலில் உள்ளோம். எனவே எங்களை பற்றி வதந்திகளை பரப்பாதீர்கள். வதந்தி பரப்பியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.