“அனைவரையும் அரவணைத்து நல்லாட்சி நடத்திய நாயகரான தீரன் சின்னமலை” – டிடிவி தினகரன்

 

“அனைவரையும் அரவணைத்து நல்லாட்சி நடத்திய நாயகரான தீரன் சின்னமலை” – டிடிவி தினகரன்

மாவீரன் தீரன் சின்னமலை 216ம் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே மேலப்பாளையத்தில் 1756ல் பிறந்தவர் தீர்த்தகிரி கவுண்டர். வாள், சிலம்பம், மல்யுத்தம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கிய இவர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார். 1801ல் ஈரோடு காவிரி கரையிலும், 1802ல் ஓடாநிலையிலும், 1804ல் அரச்சலுாரிலும் நடந்த போர்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். இதையடுத்து ஆங்கிலேயர்கள் இவரை 1805 ஜூலை 31ல் அவரை துாக்கிலிட்டனர். இருப்பினும் அவர் உடல் ஆகஸ்ட் 3ஆம் தேதியே அடக்கம் செய்யப்பட்டது.அந்த வகையில் இன்று மாவீரன் தீரன் சின்னமலை 216ம் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய விடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத மாவீரராக திகழ்ந்து, ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய மன்னர் தீரன் சின்னமலை அவர்கள் இந்த தேசத்திற்காக தன் இன்னுயிரை ஈந்த நாள் இன்று!சுதந்திர வேட்கை கொண்டிருந்ததோடு மட்டுமின்றி, சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அரவணைத்து நல்லாட்சி நடத்திய நாயகரான தீரன் சின்னமலையின் பெருமைகளை எந்நாளும் போற்றிடுவோம்! ” என்று பதிவிட்டுள்ளார்.