சசிகலா நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு செல்லவில்லை- தயாநிதிமாறன்

 

சசிகலா நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு செல்லவில்லை- தயாநிதிமாறன்

திருவாரூர் அடுத்த காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். எடப்பாடி பழனிச்சாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அவர் ஒரு அணைகின்ற விளக்கு. முதல்வர் பதவி அவருக்கு சசிகலா போட்ட பிச்சை. அந்த பயத்தால் எடப்பாடி பழனிச்சாமி பிதற்றுகிறார், உளறுகிறார். 2021 தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி இருக்காரா என்பதை பார்ப்போம்.

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என ஆரம்பத்திலிருந்தே திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். கனமழையால் பயிர் பாதித்தவர்களுக்கு தமிழக அரசு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்குகிறது. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறுகிறார். இது தவறா? சசிகலாவும் ஜெயலலிதாவும் கூட்டுக் களவாணிகள். ஜெயலலிதாவுடன் சேர்ந்து குற்றம் செய்ததற்காக சிறைக்கு சென்றவர் சசிகலா. அவர் நாட்டுக்காக, நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு செல்லவில்லை.

சசிகலா நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு செல்லவில்லை- தயாநிதிமாறன்

எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து விட்டு வந்த பின்னர், தனிமை சிறையில் இருந்த சசிகலாவிற்கு கொரோனா வந்துவிட்டது என சந்தேகத்தை அவரது சகோதரர் திவாகரன் மற்றும் குடும்பத்தினரும் எழுப்புகின்றனர். இதில் நாங்கள் கேள்வி கேட்க முடியாது. சசிகலாவின் உறவினர்கள் தான் தைரியமாக கேள்வி கேட்கவேண்டும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என இருக்கக் கூடாது. பாஜகவை பொருத்தவரை ஏ,பி,சி என பல்வேறு டீம்களும் வருமானவரி, சிபிஐ என பல்வேறு டீம்களும் வைத்துள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தமிழக மக்கள் நிராகரித்து விட்டனர். ஒரு இடம் கூட வெற்றி பெற முடியவில்லை. பாஜக தங்களை பெரிய சக்தியாக காட்டிக் கொள்வதற்காக ஊடகங்களை மிரட்டி தங்களை ஊதிப் பெரிதாக்கி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

7 பேர் விடுதலையில் தேவையற்ற தாமதம் நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே திமுக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக ஆளுநர் தாமதிக்கிறார். ஆளுநர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி. ஆளுநர் எந்த முடிவு எடுத்தாலும் அது மத்திய அரசின் முடிவு தான். பாஜக அரசு மோடி அரசு 7 பேரை விடுதலை செய்ய கூடாது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் யார் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது” எனக் கூறினார்.