இருவேறு இடங்களில் லாரி கவிழ்ந்து விபத்து; இருவர் உயிரிழப்பு

 

இருவேறு இடங்களில் லாரி கவிழ்ந்து விபத்து; இருவர் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம்

தொப்பூர் பகுதியில் இருவேறு இடங்களில் லாரிகள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட இருவர் உயிரிழந்தனர், மேலும், படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் முனியப்பன் கோயில் அருகே இன்று அதிகாலை பிஸ்கட் பாரம் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரி ஒன்று, ஓய்விற்காக நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, கொல்கத்தாவில் இருந்து கேரளாவுக்கு மிளகாய் ஏற்றிச்சென்ற லாரி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் 2 லாரிகளும் சாலையில் கவிழ்ந்த நிலையில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும் லாரிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் மிளகாய் ஏற்றிச்சென்ற லாரியின் ஓட்டுநர் திருச்சியை சேர்ந்த ரங்கராஜ்(35) என்பவரும், இருசக்கர வாகனத்தில் சென்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த கண்ணதாசன்(30) என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மணிகண்டன்(30) மற்றும் பிரகாஷ் ஆகியோர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருவேறு இடங்களில் லாரி கவிழ்ந்து விபத்து; இருவர் உயிரிழப்பு

இதனை தொடர்ந்து பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு பழங்களை ஏற்றி வந்த லாரி ஒன்று, தொப்பூர் கணவாய் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் ரகுநாத் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். இருவரையும் போலீசார் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த இரு விபத்துக்கள் காரணமாக தொப்பூர் கணவாய் பகுதியில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.