கங்கையின் கதை: கங்கையில் அஸ்தியைக் கரைப்பது ஏன்?

 
bhagiratha

இந்துக்கள் இறந்தவர்களின் அஸ்தியைக் கங்கையில் கரைப்பதை பெரும் புண்ணியமாக கருதுகின்றனர். இதனால்தான், இறந்த உடல்களை கங்கையில் அப்படியே வீசிச் செல்வதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கங்கை ஏன் அவ்வளவு புனித நதியாக, புண்ணிய நதியாக பார்க்கப்படுகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

புராண காலத்தில் அயோத்தியை ஆட்சி செய்து வந்த சாகரன் என்ற மன்னன் அஸ்வமேத யாகம் நடத்தத் திட்டமிட்டான். இதற்காக குதிரையை ஏற்பாடு செய்தான். குதிரை இருந்தால்தானே யாகம் நடக்கும் என்று நினைத்த சிலர் அந்த குதிரையை கவர்ந்துகொண்டு பாதாளத்துக்குச் சென்று கபில முனிவர் யாகம் செய்து கொண்டிருந்த இடத்தின் அருகே கட்டிவைத்துவிட்டனர். இதனால் குதிரையை மீட்டு வரும்படி தன்னுடைய 60 ஆயிரம் மகன்களை அனுப்பிவைத்தார். நாடு முழுக்க தேடி அலைந்த சாகரனின் மகன்கள் காடுகளை அழித்தனர். கண்ணில் படுவதை எல்லாம் தீவைத்துக் கொளுத்தி அட்டகாசம் செய்தனர்.

கடைசியில் பாதாள உலகில் குதிரை இருப்பதை அறிந்து அங்கு சென்றனர். குதிரையானது கபில முனிவர் அருகில் இருக்கவே, முனிவர்தான் குதிரையை திருடிக்கொண்டு வந்து இங்கு கட்டி வைத்துள்ளார் என்று முடிவுக்கு வந்தனர். அனைவரும் ஒன்று சேர்ந்து கபில முனிவர் மீது தாக்கினர். இதில் தவம் கலைந்து கண் விழித்த கபில முனிவரின் கோபக் கனலில் 60 ஆயிரம் இளவரசர்களும் சாம்பல் ஆகினர்.

அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கோசல நாட்டை ஆட்சி செய்த சாகரனின் வாரிசுகளால் சிறப்பாக ஆட்சி செய்ய முடியவில்லை. இறந்து போன 60 ஆயிரம் பேரின் பாவங்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்தவர்களை அழுத்தியது. நாட்டில் பல்வேறு தீமைகள், பஞ்சம், பட்டினி, இயற்கை பேரிடர் போன்றவை ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாடு தன்னுடைய அமைதி, வளம், மகிழ்ச்சியை இழந்தது.

பகீரதன் என்பவன் மன்னராக பொறுப்பேற்ற பிறகு இந்த பிரச்னைக்கு முடிவுகட்ட விரும்பினார். இறந்து போன 60 ஆயிரம் முன்னோர்க்கு முக்தி கிடைக்காதது தெரியவந்தது. முன்னோர் முக்தி அடைய தேவலோகத்தில் ஓடும் கங்கை ஆறு பூமிக்கு வர வேண்டும். அப்போதுதான் அவர்களின் பாவங்கள் போகும் என்று தெரியவே, பிரம்மனை நோக்கி நூற்றுக் கணக்கான ஆண்டுகள் தவம் செய்தான்.

கடும் தவத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மா, பகீரதனுக்கு முன் தோன்றி வரம் அளித்தார். அப்போது, ஆகாயத்தில் உள்ள கங்கை பூமிக்கு வர வேண்டும். அப்போதுதான் என் முன்னோர்க்கு இறுதிச் சடங்குகள் செய்ய முடியும் என்று கூறினான்.

இதைக் கேட்ட பிரம்மா, ஆகாயத்தில் இருந்து வரும் கங்கையை பூமியால் நேரடியாக தாங்க முடியாது. கங்கையின் வேகத்தில் பூமி அழிந்துவிடும். இதைத் தடுக்க சிவபெருமானிடம் வேண்டும்படி கேட்டுக்கொண்டார். மீண்டும் தவம் செய்து சிவபெருமானின் அருளைப் பெற்றார் பகீரதன். சிவபெருமானும் தன்னுடைய தலையில் தாங்கிக்கொண்டு கங்கையைப் பூமியில் வழிந்தோட அனுமதிப்பதாக உறுதியளித்தார்.

உடனே ஆகாயத்திலிருந்து பூமிக்கு கங்கை வந்தது. அதைச் சிவபெருமான் தன்னுடைய தலையில் தாங்கி கூந்தலால் முடிந்துகொண்டார். பின்னர் கங்கையைப் பகிரதனிடம் அளித்தார். அப்போது சில துளிகள் ஜாஹனு ரிஷியின் ஆசிரமத்தில் பட்டு அது அழிந்தது. இதனால் கோபம் கொண்ட ரிஷி கங்கையை தன் உள்ளங்கையில் எடுத்துக்கொண்டார். மீண்டும் பகீரதன் ரிஷியிடம் வேண்டும் கங்கையை அனுப்பும்படி வேண்டினான். அதை ஏற்று ரிஷி தன்னுடைய காது வழியே கங்கையை அனுப்பினார். இதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயரும் ஏற்பட்டது. இப்படியாக பூமியை வந்தடைந்த கங்கையின் நீரை இறந்த முன்னோர் சாம்பல் மீது தெளித்து அவர்களுக்கு முக்தி கிடைக்கச் செய்தான் பகீரதன். இதையே பகீரத முயற்சி என்று இப்போது நாம் செல்கிறோம். பகீரதன் முயற்சி செய்து அழைத்து வந்ததால் கங்கைக்கு பகீரதி என்ற பெயரும் ஏற்பட்டது.

முன்னோரின் பாவங்கள் போக்க, அஸ்தி மீது தெளிக்கவே ஆகாயத்தில் இருந்து கடும் முயற்சி செய்து கங்கையை அழைத்துவந்தான் பகீரதன். அதனால்தான் பாவங்களைப் போக்கும் என்ற நம்பிக்கை அடிப்படையில் பலரும் கங்கையில் சாம்பலைக் கலந்து விடுகின்றனர்.