கார்த்திகை தீபம் விளக்கேற்றுவது எப்படி?

 
Karthigai Deepam

கார்த்திகை மாதம் பௌர்ணமி, கார்த்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வருகின்ற இன்றைய நாளையே கார்த்திகை தீப திருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். கார்த்திகை தீபம் என்றாலே திருவண்ணாமலை தீபம் தான் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். கார்த்திகை தீபத்தன்று வீடுகள் எல்லாம் விளக்குகள் அலங்கரிக்கப்படும்.

திருவண்ணாமலையில் இன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்படும். அந்த நேரத்தில் நம்முடைய வீடுகளிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். நேற்று பரணி தீபம் ஏற்றியிருப்போம். நாளையும் தீபம் ஏற்ற வேண்டும். இன்று வீட்டின் எல்லா அறைகளிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

வாசல் தொடங்கி, படுக்கை அறை வரை எல்லா அறைகளிலும் மொத்தம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். 27 விளக்குகள் ஏற்ற வசதி இல்லாத சிறிய அறைகள் கொண்ட வீடுகளில் வசிப்பவர்கள் குறைந்தபட்சம் மூன்று விளக்காவது ஏற்ற வேண்டும்.

பஞ்சலோகம், வெள்ளி விளக்கு, பாவை விளக்கு, சர விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கோடி விளக்கு, தூண்டா மணி விளக்கு, அகல் விளக்கு என விளக்குகளில் பல வகைகள் உள்ளன. அவரவர் வசதிக்கு ஏற்ப எந்த ஒரு விளக்கிலும் தீபம் ஏற்றலாம். வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நெய் ஆகிய ஐந்து எண்ணெய்கள் சேர்த்து தயாரிக்கப்படும் எண்ணெய் கொண்டு விளக்கேற்றுவது நல்லது. விளக்கை வாழை இலை அல்லது பசுஞ்சானத்தின் மீது வைக்க வேண்டும்.

தீபத்தை தெற்கு திசை தவிர்த்து மற்ற திசைகளில் ஏற்றலாம். வடக்கு திசையில் ஏற்றுவது அறிவு வளர்ச்சி, செல்வம், வளத்தைத் தரும். திருமணத் தடையை போக்கும். கிழக்கு பக்கம் பார்த்து ஏற்றுவது துன்பங்களை நீக்கும், மேற்கு திசையைப் பார்த்து ஏற்றுவது கடன் பிரச்னை, தோஷங்களை போக்கும்.

விளக்கைத் தானாக அணைய விட வேண்டாம். அணையும் நேரத்தில் வாயை ஊதியும் அணைக்க வேண்டாம். அப்படி செய்வது தீமையையே தரும். அதற்கு பதில் பூவைக் கொண்டு அணைக்கலாம். பூவை நெருப்பில் வைக்க விருப்பம் இல்லாதவர்கள், தண்ணீர் விட்டோ, பால் விட்டோ விளக்கை அணைக்க வேண்டும். அப்படி செய்யும் போது "சாந்த ஸ்வரூபியே நமஹ" என்று மனதில் சொல்லித் தியானிக்க வேண்டும். இந்த கார்த்திகை தீப நன்னாளில் வீடுகளில் விளக்கேற்றி வளம் பெறுவோம்!