ஊரடங்கில் அரபு நாட்டிலிருந்து செஸ் பயிற்சிபெறும் தேவகோட்டை அரசு உதவிபெறும் பள்ளி மணவர்கள்!

 

ஊரடங்கில் அரபு நாட்டிலிருந்து செஸ் பயிற்சிபெறும் தேவகோட்டை அரசு உதவிபெறும் பள்ளி மணவர்கள்!

கொரோனா நோய்த் தொற்று உலகை முடக்கிவிட்டது. அலுவலகங்களில் இயல்பான பணிகளை செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. குறிப்பாக, பள்ளிகளுக்குத் தேர்வுகூட வைக்க முடியாத நிலை. மீண்டும் எப்போது பள்ளித் தொடங்கும் என்று இப்போதைக்கு தெரியவில்லை. இதனால் மாணவர்கள் வீட்டுக்குள் முடங்கிவிட்டனர். சுதந்திரமாக வெளியில்கூட விளையாட முடியவில்லை.

இந்த ஊரடங்கு சூழலில் தங்கள் பள்ளி மாணவர்களின் திறனை வளப்படுத்த ஆசிரியர்கள் முயற்சி செய்துவருகின்றனர். வாட்ஸப் வழியே கதை சொல்வது, கதை புத்தகங்கள் கொடுத்தனுப்பி படிக்கச் சொல்வது எனப் பலரும் தங்களால் இயன்ற பணிகளைச் செய்துவருகின்றனர். தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்துவருகின்றனர்.

ஊரடங்கில் அரபு நாட்டிலிருந்து செஸ் பயிற்சிபெறும் தேவகோட்டை அரசு உதவிபெறும் பள்ளி மணவர்கள்!
கடந்த இரண்டு மாதமாக குவைத் நாட்டிலிருக்கும் செஸ் பயிற்சியாளர் வள்ளியம்மை சரவணன், தேவகோட்டை பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துவருகிறார். குவைத் நேரப்படி காலை 4 மணிக்கு தயாராகி, (இந்திய நேரம் காலை 7 மணி) மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக சதுரங்க பயிற்சி வழங்கி வருகின்றார். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெரும்பாலான பெற்றோர்கள் கூலி வேலை பார்க்கும் நிலையில், சில மாணவர்களிடம் மட்டுமே வாட்ஸ்அப் மொபைல் போன் உள்ளது.அதிலும் ஒரு சில மாணவர்களிடம் மட்டுமே செஸ் போர்டு மற்றும் காயின் உள்ளது. அந்த மாணவர்களைக் கண்டறிந்து, ஒருங்கிணைத்து, ரூக் பிரிவு, கிங் பிரிவு, குயின் பிரிவு எனக் குழுக்களாக மாணவர்களைப் பிரித்துக்கொண்டு செஸ் பயிற்சி அளித்து வருகின்றார்.

மாணவர்கள் எவ்வாறு பயிற்சி எடுத்துவருகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள, வள்ளியமை போட்டி ஒன்றையும் நடத்தினார். பள்ளி மாணவர்களுக்கு இடையே ஆன்லைன் வழியாக வீட்டிலிருந்தபடியே செஸ் போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்தனர். கடந்த வாரம் முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்றது. தினமும் காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் ஆன்லைன் வழியாக மாணவர்கள் தங்களுக்குள்ளேயே விளையாடும் வகையில் போட்டி நடந்தன.

ஊரடங்கில் அரபு நாட்டிலிருந்து செஸ் பயிற்சிபெறும் தேவகோட்டை அரசு உதவிபெறும் பள்ளி மணவர்கள்!
மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்ற இந்தப் போட்டியில் ஜோயல் என்கிற மாணவர் 15 புள்ளியைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். திவ்யஸ்ரீ, ஈஸ்வரன், முத்தையன், பிரதிக்ஷா ஆகியோர் முறையே பதின்மூன்றரை புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர். சண்முகம் என்கிற மாணவர் 13 புள்ளிகள் எடுத்து மூன்றாம் இடத்தைப் பிடித்தார். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் வள்ளி சரண் சதுரங்க அமைப்பின் மூலமாக, பள்ளி இயல்பாக நடைமுறைக்கு வந்த பிறகு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

“ஏதேனும் ஒருவகையில் மாணவர்கள் புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்வழியே அவர்களின் திறமை மேம்பட்டு, இன்னும் பரந்துபட்ட உலகிற்கு அறிமுகமாக வேண்டும். அதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதுபோன்ற போட்டிகளைத் தொடர்ந்து நடத்தப்படும்” என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

விடுமுறை என்றாலே மாணவர்கள் எப்போதுமே மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால், இந்தக் கொரோனா விடுமுறை என்பது அவர்களையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி விட்டது. எனவே, அதிலிருந்து மாணவர்களை மீட்க இதுபோன்ற செயல்பாடுகள் அவசியம். அதை முன்னெடுத்து செல்லும் ஆசிரியர்கல் பாராட்டுக்கு உரியவர்களே.