உடல் எடை குறைக்கும் டீடாக்ஸ் டிரிங்க்ஸ்!

 

உடல் எடை குறைக்கும் டீடாக்ஸ் டிரிங்க்ஸ்!

உடல் பருமனால் அவதியுறுபவர்களிடம் கேட்டால் பல ஆண்டுகளாக உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்து வருகிறேன் என்று கூறுவார்கள். ஆனால் நாளுக்கு நாள் உடல் எடை அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. டயட், உடற்பயிற்சி என முயற்சி செய்தும் உடனடியாக பலன் கிடைக்கவில்லை என்று அதை அப்படியே விட்டுவிடுவதைக் காண முடியும்.

உடல் எடை குறைக்கும் டீடாக்ஸ் டிரிங்க்ஸ்!

எளிய வெயிட் லாஸ் டீடாக்ஸ் டிரிங்க்ஸை டிரை செய்து பாருங்கள். ஒரு சில வாரங்களில் வித்தியாசம் தெரியும்.

ஆரஞ்சு – கேரட் – இஞ்சி டீடாக்ஸ் டிரிங்க்ஸ்

தேவையானவை: கேரட் – 1, ஆரஞ்சு – 2, இஞ்சி, மஞ்சள் – சிறு துண்டு, எலுமிச்சை – 1/2 பழம்.

ஆரஞ்சு தோல் நீக்கி ஜூஸ் தயாரிக்க வேண்டும். கேரட்டை தனியாக அரைத்து ஜூஸ் எடுக்க வேண்டும். இந்த இரண்டு ஜூஸையும் மிக்ஸி ஜாரில் விட்டு அதனுடன் இஞ்சி, மஞ்சள் துண்டை சேர்த்து 30 விநாடிகளுக்கு மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனுடன் அரை பழம் எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்.

பலன்: ஆரஞ்சில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. கேரட்டில் வைட்டமின் ஏ, நார்ச்சத்து உள்ளது. இது செரிமானப் பிரச்னையை நீக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இஞ்சி காலம் காலமாகப் பயன்படுத்தி வரும் உணவு. இதுவும் செரிமானப் பிரச்னையை குணப்படுத்த உதவும்.

வெந்தய நீர்

ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து இரவில் ஊற வைக்க வேண்டும். காலையில் வெந்தயத்தை வடிகட்டி, தண்ணீரை மட்டும் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், தைராய்டு பிரச்னைகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. தொடர்ந்து இதை அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

சீரகம் – எலுமிச்சை நீர்

சீரகத்தை முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் அதை அப்படியே அடுப்பில் வைத்துக் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். அதை வடிகட்டி சீரகத்தை தனியாக வைத்துவிட வேண்டும். வெதுவெதுப்பான வெப்பநிலை வந்த பிறகு அதில் சிறிது எலுமிச்சை கலந்து அருந்த வேண்டும். இப்படி செய்வதால் வயிறு செரிமான மண்டல உறுப்புகள் செயல்திறன் மேம்படும். வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்புகள் நீங்கும்.

தனியா நீர்

மூன்று கப் தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் தனியா விதையைப் போட்டுக் கொதிக்க விட வேண்டும். இது வெதுவெதுப்பான வெப்பநிலைக்கு வந்ததும் அருந்த வேண்டும். இதில் அதிக அளவில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் உள்ளன. இவை உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன் வேறு பல உடல் நல பிரச்னையில் இருந்தும் நம்மைக் காக்கும்.